சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சாம்பாக்கம் செல்வா நகர் பிரதான சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அருண் பாரதி தம்பதியினருக்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு ஒரே பிரசவத்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.பாரதி நண்பகல் 2 பெண் குழந்தைகளை அறையில் உறங்க வைத்துக் கொண்டு இருந்துள்ளார்.அப்போது சில நொடியிலே ஒரு பெண் குழந்தை காணவில்லை என கத்தி கூச்சலிட்டுள்ளார்.பாரதி கத்தி கூச்சலிடும் சத்தம் கேட்டதும் மேலே தூணி காய வைத்திருந்த மாமியார் மற்றும் அருணின் அண்ணன் மனைவி இருவரும் ஓடிவந்து என்னவென்று கேட்டுள்ளனர். அப்போது பாரதி குழந்தையை கட்டிலில் உறங்க வைத்து விட்டு சமயலறைக்கு சென்றதாகவும் வந்து பார்த்தபோது ஒரு குழந்தையை காணவில்லை என்றும் கூறியுள்ளனர்.
பின்னர் சம்பவம் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நீலாங்கரை போலீசார் குழந்தையின் தாய் மற்றும் வீட்டில் இருந்த உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். குழந்தையின் தாய் பாரதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பாரதி அதிகளவு மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததாலும் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பிறந்து 43 நாட்களே ஆன குழந்தையை கட்டப்பையில் போட்டு வீட்டின் அருகே உள்ள காலி மைதானத்தில் தூக்கி எறிந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் காலி இடத்தில் சென்று பார்த்தபோது இறந்த நிலையில் 43 நாட்களே ஆன குழந்தையை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் குழந்தையின் தாய் பாரதியை நீலாங்கரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பெற்ற தாயே குழந்தையை கொன்ற சம்பவம் சென்னையை உலுக்கியுள்ளது